மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஒற்றைச் செருப்பும் தொலைந்த காதலும்



நடை குதித்தும்
நாசித்துவாரம் அடைத்தும்
அவசர கதியில் -
கடந்துவிடத் துடிக்கும்,

நாற்றப் பெருவெளிச்
சூனியப் பிரதேசத்தின்,

நாய்கள் படுத்தெழும்பும்
நடைபாதையோரக்
குப்பை மேட்டடிவாரத்தில்,

வெயில் தின்றதில்
உடம்பு வற்றித்
தாடை கிழிந்து,

அழுக்குச்சேறு
குளித்தழுதும்,

அடிப்பாதமறுந்தும்

தனித்துச்
சுருண்டிருக்கும்
ஒற்றைச் செருப்பைப்
பார்க்க நேரும்போது,

தேவை தணியக்
காத்திருந்து...

யாரோவொரு
தாவணி தேவதை
ஏறிமிதித்துக்
காயப்படுத்தித்
தூக்கியெறிந்ததோர்,

காதலாகத்தான்
தவிர்க்கவியலாது
நினைத்துக் -
கனக்கிறது மனசு.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: