மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

என் காதல் வியாதிக்காரிக்கு...

மனசு குடிக்கத்
தந்த காதலை
உயிர் குடிக்கச்
சேமித்தாயோ
கண்மணி...

உதடுகள்
- உலர்ந்து
கண்கள்
-வெளிறி
மூச்சுத்
- திணறி...

அண்மைக்
காலமாய்
அதிகம் -

படுக்கை கசந்தும்
எழமுடியாதவளாய்.

நோயணிந்துதான்
நோவுகிறது -
உன்னுடல்.

படுக்கை கசந்து
எழமுடிந்தவனாய்,

உனையிழந்த
திசையில்
விரதமிருந்து
தேடியும்,

உனக்கான
கைமருந்தைக்
கண்டெடுக்கத்
தெரியவில்லை
என் -
காதலுக்கெனும்போது...

நோயணியாமலேயே
நோவுகிறது -
என்னுடல்.

கண்மணி...

கசக்கும் -
மாத்திரை மரத்து
மருந்தினிக்க
உன் பிணியகலாமலேயே
இருக்குமென்றிருந்தால்,

மனசிறுக்கியுன்
நினவுகளிலிருந்து
எனைத் துரத்திக்
கலைந்து பாரேன்...

கனிந்த முகமாய்
அடுத்த கணமே
நீ -
எழுந்திருக்கக்கூடும்.

வியாதிகளை -
எழுதிச் செல்லும்
விதியின் கைதானே
காதலென்பதையறிந்தும்...

காலத்துக்கும் நீ
நோயணியத் துணிந்தால்
பொறுக்காது -
எந்தக் காதலுக்கும்.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: