உயிருக்கு
உயிரூட்டிய
உயிரே...
காற்று
செத்துக்கிடக்கும்
காலங்களில்கூட...
காயக் காய
எச்சில் தடவி
கையகராதிகள்
புரட்டிப் பார்த்தும்
அர்த்தம் புரியவில்லை
உன் மவுனத்திற்கு.
மவுனமாய்
மறந்துபோகும்
மழை நாட்களில்
எனக்குள் -
மறக்காமல் இருப்பது
நானும் நீயும்
முதல் சந்தித்த
அந்த -
முத்தான ' துளி ' நாள்தான்.
மழை தெறித்துப்
- பரவும்
மண்வாசனைக்குப்
- பதிலாக
இப்போதெல்லாம்
மழை நாட்களில்
அதிகம்
உன் வாசனைதான்.
இயல்பாய் நனைந்து
வந்த எனையுணர்ந்து
இரக்கமேயில்லாமல்
உன்னழகை மட்டும்
ஊதாக் குடைக்குள்
எடுத்து -
என்னை நீ
விட்டுச் சென்றயிடத்தில்
எஞ்சிய வாசம்பிடித்து
சிறுகச் சிறுகச்
சேமித்த காதலிது.
நீ -
சிரித்துவிட்டாவது
போயிருக்கலாம்...
வந்திருக்கலாம்...
கால்போன போக்கில்
நாட்கள் நடக்க
நீயும் போகிறாய்...
வருகிறாய்...
வாழ்வாசையிழந்து
என்னுள் கரையும்
காதலையறியாமல்...
என் வாழ்வில்
அந்த மழைநாள்
வராமலேயே
போயிருக்கலாம்...
இல்லை -
நான் குடையெடுத்து
வந்திருக்கலாம்.
கடற்கரைப் பரப்பில்
கவிகேட்கும்
இயற்கையாய்
என்றென்றும் எனக்குள்
- பறக்கும்
சிறகுகள் இருந்ததில்லை.
படபடக்கும் உன்
ஒரு நிமிடப்
பார்வைப் பொருளை
காதலாய்க் கருதி
மொழிபெயர்த்துக்
கொண்டதில்தான்
சிறகுகள் முளைத்துப்
பரவசம் பெற்றிருக்கிறேன்.
இதயத்தில் உனக்கு
இருக்கை
போட்டிருக்கிறேன்.
வாழ்க்கைக்கு
வாசம் தந்தவளே
நீ வந்தமறாவிட்டாலும்
வறட்சியாய் முறைத்து
எனை -
வெறுத்தொதுக்கிப் போகாதே.
ஏனெனில் -
உயிமூச்சு என்பது
அழுகைக் கடலிலும்
அடிமனத்து சுனாமியிலும்
சட்டென்று அறுபடக்கூடியது.
நீ -
மறந்துவிட்டிருந்தாலும்...
மறக்கமுடியாத
என்னைப்போல்
அந்த -
வானமழுத நாள்தான்
என்னையும் உன்னையும்
சந்திக்க வைத்தது.
என்னை -
உன்பால்
சிந்திக்க வைத்தது.
அப்படியின்னுமொரு
வானமழும் நாளில்தான்
உனக்கும்
காதல்
குளிரெடுக்குமென்றால்...
அந்த நாளில்
மறக்காமல் குடைபிடிக்க
மறந்து -
இயல்பாய் மீண்டும்
நனைந்து வருவேன்...
நீயுன் குடையெடுத்து
வருவாயா?
எனக்கும் சேர்த்து.
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
30.01.2000




