மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 அக்டோபர், 2009

கொழும்பு வீதியில் உன் ஞாபகம்


முதுகில்
புத்தக மூட்டை
சுமக்காத...

இராக்களை
இண்டர்நெட்டுக்குள்
விழிக்காத...

மண்தரைப்
பள்ளியொன்றில்
மடிந்து கலைந்து
எண்ணெய் அழுக்கேறி
இத்துப்போன ஏடுகளில்
எச்சில் விட்டழித்தழித்து
கணக்கும் தமிழும் எழுதிய...

குக்கிராமம் முழுக்க
குளிரியற்கைக் காற்றோடு
- நெல்லும்
குடில் முழுக்க வறுமையும்
சதா விளைந்திருந்த...

தெருக்கொரு குழாயடிச்
- சண்டையோடு
முத்து முத்தாய்
ஊருக்குள் மட்டும்
மின்சாரம் முளைத்திருந்த...

இருபத்திசொச்சம்
வருஷங்களுக்கு முன்னையதோர்
இனிப்பான
கற்கண்டுக் காலம்!

மனசு கலைந்து
- எழுந்து
'பயாஸ்கோப் பார்க்கணும்'
என்றிருந்த ஆசையை
எகிறச் செய்ததில்
அப்பா 'தூத்தேரி'
என்று துப்பிவிட்டுப்போக...

எட்டுக்கும் ஒன்பதுக்கும்
இடையிலான வயதில்
- ஒரு நாள்
அப்பாவுக்குத் தெரியாமல்
அம்மா சேலை முடிப்பில்
வைத்திருந்து தந்த
ஐம்பத்தைந்து பைசா...
கொறிக்கவென்று
காரமாய்க் கொஞ்சம்
கொச்சிக்காய்த் தூள் கலந்த
உப்புத் துண்டங்கள்...

எல்லாம் எடுத்துச் சென்று
தனித்துப் பார்த்த படம்
'பாலும் பழமும்'

அதே கனவோடு
தூங்கியெழும்பி
வாய்கழுவாமல்
வசனங்கள் ஒப்புவித்து
வாரங்கள் வருஷங்கள்
தாண்டியொரு 'வைரநெஞ்சம்'

அடுத்ததொரு ஆடி மாதத்தில்
'அந்தமான் காதலி'

கடற்பாறை பிளந்துவரும்
கல்லெடுத்துத் தன் நடிப்பால்
சிற்பமெனச் சித்தரிக்கும்
சிவாஜியை சில்லென்று
எனக்குள் நான்
சுவாசிக்கத் துவங்கியது
இப்படித்தான்...

இடையேயொரு
இருட்டு ராத்திரியில்
இடறிய கால்விரலில்
வடிந்த குருதி
மறந்து சென்று பார்த்த
'நவராத்திரி'யும் ஞாபகம் !

தோட்டத்து கத்திரிக்காய்
விற்ற காசில்
கைவைத்தோர் 'கவரிமான்'...

காலம் கடந்தும்
பசுமையாய் எல்லாமே
நேற்றைக்கு முன்தினம்போல்...

நேற்றைக்கு
காற்றோடு வந்த சேதி
தூக்கிவாரிப் போட்டது

அந்த-
நீலவானப் பறவையின்
நினைவலைகள்
எண்ணச் சுவர்களை
எப்போதாவது அரிக்கும்போது
என்னில் ஏற்படும்
- சந்தோசம்
சடக்கென்று காணாமல்போய்...

ஆண்டவன் கட்டளையை
அபத்தமாகச் சொல்கிறார்கள்

வசந்தமாளிகை
- வாசஸ்தளத்தில்
ஓய்வென்னும்
நோய்க்கிடங்கொடுத்து
ஆரோக்கியமாயிருக்க
- வேண்டியவன்
சாவின் சாய்வு
நாற்காலிக்குச் சென்றுவிட்டதை
அபத்தமாய்ச் சொல்கிறார்கள்...

ஆலயமணி ஓசையில்
திடுக்கிட்டு
அறிவு சிலுப்பிச்
சிந்திக்கிறேன்

நடிப்புலக ராஜபாட்டையில்
சிறகுகளால் நடந்து
நாட்களை ருசிக்கச்
செய்து காட்டிய ரங்கதுரை
எல்லோர் முகங்களையும்
தொங்கப் போட்டுவிடச் செய்யும்
ஓய்வெடுத்துப் போனதில்...

சாவதற்குள்
நான்
செத்துவிடக்கூடாதா?
இன்றைய குட்டித்தீவின்
கொழும்பு வீதி முழுக்கவும்
அழகிகள் இருக்கிறார்கள்
அபரிமிதமாக இளநீர்களும்
- கிடைக்கின்றன

ஆனால்
மனசு மட்டும்
வெறுமையாய்...

'அழகியொருத்தி
இளநீர் விற்ற
கொழும்பு வீதி'யின்
அந்தக் கலகலப்பும்
காதலும் காணாமல்போய்...

பச்சை விளக்கெரிந்த
- பின்னும்
பாதையைக் கடக்க மனசின்றி...

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

நன்றி
# செந்தூரம் ஆகஸ்ட் 05-11,2001 இதழ்

கருத்துகள் இல்லை: