மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 அக்டோபர், 2009

டயானா என்கிற நிலவும் என் பளிங்குக் கவிதையும்

ஒரு...
நிலவு
நித்திரை கொள்கிறது !

நிந்தனையுலகில்
நீடிக்கப் பிடிக்காமல்
நினைவு மறந்து போய்
நிலவு -
நித்திரை கொள்கிறது !

கனாக்களைத் தின்று
இராக்களை விழித்து
வாழ்ந்த
இந்த நிலவுக்குப் பெயர்
டயானா...

தட்டியெழுப்பாதீர்கள் !

சின்னச் சப்தமிட்டாலும்
திடுக்கிட்டெழும்...
பாவம் !

நிலவு
நித்திரை கொள்ளட்டும்
நிந்திக்க வேண்டாம்...

நித்திரையின் போதும்
நித்திய அழகு-
இந்த நிலவு மட்டுமே...

இந்த நிலவைப்
- பாலெனலாம்
- பூவெனலாம்
- புன்னகையெனலாம்
- சௌந்தர்யப்
பூந்தோட்டமெனலாம்
எப்படிப் பார்த்தாலும்
நிரந்தர அழகு
இந்த நிலவு மட்டுமே...

அழகின் அடையாளம்
இது -
நடந்து வந்தாலே
தனிக் கம்பீரம் !

இளமான நிலவு
இதமானது...
இந்த இளமையான
நிலவு
இதயங்களின் வசமானது !

ஆர்ப்பாட்டமில்லாத
இவ்வழகில்
அலையடித்து
- ஆர்ப்பரித்துக்
- காணாமல் போனோர்
ஆயிரம் பேர் !

வான் நிலவெரிந்த போது
குதூகலித்துப் போனவர்களுக்கு
- மத்தியில்
இந்த நிலவெரிந்த போது
குளிர்ந்து போனோர்
- கோடிப் பேர் !

அப்படியிருக்க
நிலாவைக் காயப்படுத்திக்
குருதிக் கையோடு
- கைகுலுக்கிக் கதையளக்கிறார்கள்
சில நூறு பேர்!

காய்க்கும்
மரத்துக்குத்தான்
கல்லடியும் பொல்லடியும்...

இந்த நிலவுக்கு
'கண்ணடி'பட்ட
காயங்களும் நிறையவே
- உண்டு

நட்சத்திரங்களே
நழுவிப்போன
நடு ராத்திரிகளில்
இந்த நிலவு மட்டும்
- விழித்தழுத
சோகக் கதையுண்டு

நிலவு-
நித்திரை கொள்கிறது
நிந்திக்க வேண்டாம்

இந்த நிலவுக்கென்று
ஒரு -
சொந்தக் கதையுண்டு
பால் ஒளியில்
இந்த நிலவு
பாழாய்ப்போன கதையுமுண்டு

வளர்பிறை
தேய்பிறைகளுக்கு
மத்தியில்
பூப்பெய்திய இதுவொரு
- பூரண நிலவு

பூச்சூடிப் பார்த்தால் -
எத்தனையழகு?

பொசுக்கிப்
போட்டிருக்கிறார்கள்
- பாவிகள் !

எமனுக்கும் எப்படி -
மனம் வந்தது?

புன்னகையிதழ் விரித்து
- பூக்கள் மலர்ந்த
வரலாற்றில்-
இந்த நிலவுப் பூ
புன்னகையிதழ் விரித்தே
இறந்து
போயிருக்கிறதா..?
இல்லை
இந்த
நிலவுப் பூ
நித்திரையில் இருக்கிறது

பனித்துளி பட்டாலே
உதிர்ந்து விழும்
- இதழ்களுக்கு மத்தியில்
இந்த நிலவுப் பூவை
ரசாயனத் துளியில்
நீராட்டியிருக்கிறார்கள்

நிலவே...
டயானா !
இதய சாம்ராஜ்யங்களின் இளவரசியே...

இக்கணம்
உன்னிழப்புக்கு
ஈடுசொல்ல
என் எழுத்துக்கு
- வலுவில்லையம்மா !

பேனா பிடிக்கும்
என் கரங்களுக்கு
காதலை மட்டுமே
கற்றுத் தந்தவள் நீ...

அப்படியிருக்கப் -
பேனா பிடித்தெழுதும்
சிலர்
உன்
குருதி மையிட்டுத்தான்
குறிப்பெடுத்திருக்கிறார்கள்

வாழும்போதும்
செத்துச் செத்து
வாழ்ந்தவள்
- நீ
சாகும் போதாவது
வாழ்த்தி வழியனுப்பி
வைத்தார்களா?

பிணந்தின்னிக்
கழுகுகள்...

உன் நாமம் சொல்லிச்சொல்லியே
பத்திரிகை வியாபாரம்
- செய்த
பகைவர்கள் அவர்கள்...

உன் மேனியழகும்
மாரழகும் பாடியே
பாரெங்கும் பத்திரிகை
- விற்ற பரதேசிகள் !

உன் பெயருக்கு
எத்தனை மவுசு...
அத்தனை
பத்திரிகையிலும்
நீ அணிவகுத்திருக்கிறாய்

உன் அந்தரங்கம்
முதலீடு செய்தே
ஆதாயம் தேடியவர்கள்...
அவர்கள் -
உன் காதலை
காட்சிப் பொருளாக்கி
மவுனத்தை
மலிவு விலையில்
- விற்பனை செய்தார்களே
அப்போதாவது -
நீ மௌனம் களைந்து
எழுந்து வந்திருக்கலாம்

இல்லை...

உனைத் திரௌபதியாய்த்
- திரித்தெழுதியபோது
சூர்ப்பனகையாய்
- உருவெடுத்திருக்கலாம் !

வித்தியாசமானவள்
- நீ
விளம்பரங்களையே
விரும்பாதவள் !

விளம்பரமே
உனை விரட்டி வந்து
எகிறி ஓடியதனால்தான்
இறப்பு வந்ததா?

இல்லை-
உலகுக்கு
இழப்பு வந்தது !

இதயங்களில்
அடைப்பு வந்தது!

இப்போது
அனாதை விருந்தாளியாய்
வாழ்க்கை
வெளியேறுகிறது !

நீ -
வாழ்வென்னும்
அற்புதத்தின்
வழிநடைப் பயணி !

காதல் பிறக்கும்
- தேகங்களில்
உன் தேகம் மட்டுமே
காதலால் பிறந்தது

காதலுக்காக -
உன் உயிரையுமல்லவா
உயில் எழுதியிருக்கிறாய்?

டயானா...
நாம் நலமில்லை
நீ -
நலமாயிருக்கிறாயா?

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

நன்றி
# செந்தூரம் ஆகஸ்ட் 05-11,2001 இதழ்

கருத்துகள் இல்லை: