மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 29 நவம்பர், 2013

இருவேறு வீடுகளில்...

அவள் வெட்கம்
கடித்துத் துப்பிய
நகத் துண்டங்களை
அவனும்

அவன் சோர்வை
எரித்துத் தீய்த்த
சிகரட் துண்டங்களை
அவளும்

இற்றைக்கும்
மறைத்தொளித்துத்தான்
சேமித்து வருகிறார்கள்

இருவேறு வீடுகளில்
வெவ்வேறான வாழ்க்கையை
ஆரம்பித்த பிறகும்!

ரிஸ்கி ஷெரீப்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

முகம் கழுவும் மலர்


அதிகாலைப் பனிப் புனலில்
தன் முகம் கழுவிக்கொள்கிறது

உறக்கம் கலைந்தெழும் மலர்!

- ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 25 நவம்பர், 2013

தனித்துச் சுருண்டு படுக்கும்...


அரிதாரம் பூசித் திருத்தி
எத்தனை அழகுபடுத்தினாலும்

அழியாக் கருமைப் புள்ளியாக
உறுத்திக்கொண்டுதானிருக்கிறது

வறுமை வரைந்த சித்திரங்களில்

தரைவிரித்த பாயில்
தனித்துச் சுருண்டு

ஒருக்களித்துப் படுத்திருக்கும்
அகோரப் பசியின் அவலம்!

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 21 நவம்பர், 2013

பனியுறைந்த நதியுலாவும்...


பனியுறைந்த நதியுலாவும்
மீனாகத்தான் இருக்கிறேன்

என் குளிரை
உன்னில் போர்த்திய
கணம் முதல்!

- ரிஸ்கி ஷெரீப்.

கசக்கும் மாத்திரைகளாக...


கசக்கும்
மாத்திரைகளாக

நான்கு சுவர்களுக்குள்
தனித்தமர்ந்தழுது

விழுங்கித்தான்
ஆகவேண்டியிருக்கிறது

அவ்வப்போது
சிறு பெரு துயர்களையும்!

-ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 18 நவம்பர், 2013

விருந்தோம்பக் காத்திருக்கின்றாள்

விழி விடுத்த
அழைப்பையடுத்து

விருந்தோம்பக்
காத்திருக்கின்றாள்

அவசரமாகத் தன்னை
அலங்கரித்துக்கொண்ட
அழகான செவ்விதழ் பெண்!

- ரிஸ்கி ஷெரீப்.

சனி, 16 நவம்பர், 2013

மனசற்ற யாரோ...

அரையிருட்டப்பிய
அமானுஷ்யம் சுற்றிவரக்
குப்பிவிளக்கெரிய

மரணப் படுக்கையில்
அனாதையாகக் கிடக்கிறது...

மனசற்ற யாரோ
முதுகு முள்ளந்தண்டில்
உடைத்தெறிந்ததோர் மலர்!

- ரிஸ்கி ஷெரீப்.

உன் எச்சில் சுவையோடு...


உலர்ந்த
உன் உதடுகளில்
புரிகிறது

அதீத தாகம்தான்
ஆயினும்

மறந்தேனும்
ஒரு மிடறில்
அருந்திவிடாமல்

உன் எச்சில் சுவையோடு

சிறுதுளியேனும்
மிச்சம் வைத்துப் போ

நான் போட்டு
நீயருந்தும்
தேநீரில்!

- ரிஸ்கி ஷெரீப்

வெள்ளி, 15 நவம்பர், 2013

என் ஊஞ்சலில் உன் காதல்



இப்போதைக்கும்
என் ஊஞ்சலை
ஆட்டுவிக்கிறது

எப்போதோ
நீ விட்டுச்சென்ற
காதல்!

- ரிஸ்கி ஷெரீப்.

ப்ரார்த்தித்துக்கொள்




காலை மழையில்
சிதைந்து சிதறிய
வாசற் கோலமாய்

கலைந்திருக்கிறது
மனசு

முடிந்தால் கொஞ்சம்
ப்ரார்த்தித்துக்கொள்

உனைச் சந்திக்க
வரும் வழியில்

ஒரு தண்டவாளமோ
ஆழப் பாழுங் கிணறோ
அலை பெருத்த கடலோ

என் பார்வையில்
படாமலிருக்கக் கொஞ்சம்
ப்ரார்த்தித்துக்கொள்1

- ரிஸ்கி ஷெரீப்.

தொலைதூரம்


இப்போதெல்லாம்
தொலைதூரமாகத்தான்
தெரிகிறது...

எனை விட்டுத் தள்ளி
நீயமர்ந்திருக்கும்
குறுந்தூர இடவெளியும்.

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 14 நவம்பர், 2013

எச்சில் உறைந்த பசி


சிறுதுளி மழையில்
நனைகிறது தனிமை

நீண்ட தண்டவாளமாய்
மல்லாக்கப் படுத்திருக்கிறது...

ஏக்கம் மேவிய
தொண்டையிடுக்கில்
எச்சில் உறைந்த பசி

கண்ணுக்கெட்டாத்
தொலைதூரமாயினும்
அவசியம் கருதி
அவசரமாயொரு துளி
எடுத்து வரமாட்டாயா

என் குளிரருந்தக்கூடிய
உன் மூச்சுக்காற்று
மின்சாரத்தை!
_ ரிஸ்கி ஷெரீப்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

காதணிகளிலாவது தொங்கவிட்டிருக்கலாம்...

கால் கொலுசில்
வீணடித்திருக்காமல்

கண்மணி...
நீ காலத்துக்கும்
கேட்கும் இசையாக

உன் காதணிகளிலாவது
தொங்கவிட்டிருக்கலாம்
என் காதலை!
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 7 நவம்பர், 2013

பனித்துளிப் பவுடரடித்து வரும்...

சிறு சொர்க்கக் கிறக்கத்தில்
அரை விழி மூட
தலை கோதிவிடுகிறது

புறக்கை மயிலிறகாய்
சில்லென்ற ஸ்பரிசத்தில்
காதுமடல் தாண்டிக்
கன்னத்தை வருடுகிறது

பின்னங்கழுத்தில்
உஷ்ண மூச்சாய்ப் படர்கிறது

சேலை விலகிய
இடை ஊடறுத்துத் தழுவியும்
நழுவுகிறது

ஆயினும்

காதல் தீப்பிழம்பு குளிரக்
கட்டியணைத்ததன் மாரில்
ஒரு சில கணம்
முகம் புதைக்க முடிவதில்லை

பனித்துளிப் பவுடரடித்து வரும்
அதிகாலை நேரக் காற்றை!

_ ரிஸ்கி ஷெரீப்

சனி, 2 நவம்பர், 2013

அலுப்பு



நசிந்து சிதறிச் செத்தவிந்த
எலியின் வீச்சம்

புகை வளையங்களாய்க்
கரையும் ஊதுபத்தி வாசம்

இரண்டுக்குமிடையிலான
அதிருப்திச் சுவாசம்

இப்போதெல்லாம்...
ஏனோதானோவென்று

அலுத்துப் போய்க்கொண்டிருக்கிறது
ஆட்சியும் வாழ்க்கையும்!
- ரிஸ்கி ஷெரீப்.

அழகோவியத்தின் தலைக்கனம்



அழகோவியத்தின் தலைக்கனத்தை
தம் உடல் முழுக்கப்
போர்த்திக் கொள்ளும் விரல்கள்

அமைதியாகத்தான் இருக்கிறது...

ஆலாபனைக்குப் பின்னயர்ந்து
சுருண்டு படுத்தெழுந்தின்னும்
குளித்து முழுகாத தூரிகை!

_ ரிஸ்கி ஷெரீப்.

ஆர்வமற்றவள்



எண் திசைகளிலும்தான்
திரிகிறாய்...

என் திசை தேடும்
ஆர்வமற்றவளாய்!

- ரிஸ்கி ஷெரீப்

கறுப்பு இரவுகள்



அழகாய்த்தான் விடிகின்றன
எனது அதிகாலைகளும்

பகலின்
பசி மயக்கத்தில்

இரவுகள் மட்டும்
எப்போதும்போலவே

கறுப்பாகத்தான் கரைகின்றன
ஒளியற்ற நிலா செத்து!

- ரிஸ்கி ஷெரீப்

விழித்துளி நெருப்பு


நடு நெஞ்சில் ஊடுருவி
முள்ளந்தண்டில் சுடுகிறது

உன்
விழித்துளி நெருப்பு!

ரிஸ்கி ஷெரீப்

கவிதைக்காரன் டயரி



கவிதைக்காரன் டயரியில்
கிறுக்கல்களாகத்தான் தெரியும்
அழகான அவன் மனசும்!
 

- ரிஸ்கி ஷெரீப்.