மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 25 செப்டம்பர், 2021

சர்க்கரை கரைந்தது


சர்க்கரை
கரைந்தது...

இனி,
சுவைத்ததையே
சுவைக்க வேண்டியிருக்கும்...

காலத்திற்கும்
புதிதாக
ருசிக்கயியலாது

இனிப்பின்
சுவையூறிய
நா!
#ரிஸ்கிஷெரீப்

புதன், 15 செப்டம்பர், 2021

உயிர் காக்கும் வித்தை


ளர்ந்து -
உடைந்தழுது
நானுன் -
தோள் சாயும்
தருணங்களில்...

என் தலை கோதும்
உன் விரல்களில்தான்
வைத்திருக்கிறாய்...

அறுந்து நெளியும்
என்னுயிர் -
காக்கும் வித்தையை.

- ரிஸ்கி ஷெரீப்.(இலங்கை}
..................................................................


மனப்பயம்

காலத்துக்கும்

கண்கள் மேய்ந்து
பழகிய பாதையிலும்

ஒளியறுந்தழும்
கறுத்த இரவுகளில்

ஒற்றையாகத்
தனித்தின்றிக்

கூட்டமாகத்தான்
அணிவகுத்தாலும்

வேகம் பிடித்தே
நடக்கச் சொல்கிறது

இருளப்பித்
துரத்தி வரும்
மனப்பயம்.

- ரிஸ்கி ஷெரீப்.(இலங்கை}

...............................................................

பாவக் கறைகள்

அம்மா தர மறுத்து -
அடம் பிடித்தாலும்

வலிந்து போய்
அவள் சேலை துவைத்துக்

கழுவிக்கொள்கிறேன்
என் பாவக் கறைகளை.

.- ரிஸ்கி ஷெரீப்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மழை பொழிந்தோய்ந்ததோர் பொழுதில்...

ழை பொழிந்தோய்ந்ததோர் பொழுதில்

மனசை நனைத்து
ஈரம்
சொட்டச் சொட்ட...

நீ எடுத்துச் செல்ல
மறந்த குடை,

மடிப்புக் கலைந்து
உலர்ந்து சுருங்கி
வாசல் கதவிடுக்கில்
அப்படியேதான் இருக்கிறது....

என் வீட்டுத் திண்ணை
கழுவிச் செல்ல
எத்தனையோ மழைகள்
வந்துபோன பிறகும்.

#ரிஸ்கிஷெரீப்

விழிகள் நீரருந்திய காலம்


விழிகள் நீரருந்திய காலம்,
வேரறுந்து போய்விட்டிருக்கிறது.

இடுப்பு மடிப்பில்
குடங்கள் அமர்த்தி

இளமை கொப்பளிக்கும்
ஈர எழுமிச்சைகளாய்...

சளக் மொளக்கெனச்
சிந்தச் சிந்த
புனலேந்தி வந்த
புல்லாங்குழல்கள்,

தாமரைத் தூரிகைகளில்
விளைந்த நீரோவியங்கள்

கயல்விழிகளான
மலர்விழிகளான
கிராமத்துத் தேவதைகள்

அவர்கள்

கிணறுகள் தொலைந்ததில்
மனசொடிந்த
மரபுக் கவிதைகள்,

மாயமாகிப் போனதில்
இருந்து

வேரறுந்து
காணாமல் போனதுதான்

விழிகள் நீரருந்திய காலம்!

#ரிஸ்கிஷெரீப்



போர்வையற்றவன் தேகம்


போர்வையற்றவன்
தேகத்தில்
குளிரை வரைந்துகொண்டிருக்கிறது...

இரவிலும் விடாது பெய்யும்
ஈவிரக்கமற்ற அடைமழை.

#ரிஸ்கிஷெரீப்

"கொஞ்சம் வந்தமர்ந்து போகவா..."

ச்சைப் படுக்கையில்
ஓர் குட்டித் தலையணை

"கொஞ்சம் வந்தமர்ந்து போகவா..."

காதல் ததும்பும் கிறக்கத்தோடு,
கண்களின்
கால் பிடித்துக் கெஞ்சுகிறது...

மதிய நேரத் தூக்கம்!

#ரிஸ்கிஷெரீப்

 

பனித்துளிப் பவுடரடித்து வரும் காற்று

சிறு சொர்க்கக் கிறக்கத்தில்
அரை விழி மூட
தலை கோதிவிடுகிறது

புறக்கை மயிலிறகாய்
சில்லென்ற ஸ்பரிசத்தில்
காதுமடல் தாண்டிக்
கன்னத்தை வருடுகிறது

பின்னங்கழுத்தில்
உஷ்ண மூச்சாய்ப் படர்கிறது

சேலை விலகிய
இடை ஊடறுத்துத் தழுவியும்
நழுவுகிறது

ஆயினும்
காதல் தீப்பிழம்பு குளிரக்
கட்டியணைத்ததன் மாரில்
ஒரு சில கணம்
முகம் புதைக்க முடிவதில்லை

பனித்துளிப் பவுடரடித்து வரும்
அதிகாலை நேரக் காற்றை!

_ ரிஸ்கி ஷெரீப்

ஊஞ்சலில் ஆடும் தேர்தல்

ன்னை
ஊஞ்சல் கட்டி
ஆட்டுவிப்பார்கள்.

உச்சி குளிரும்...
உள்ளமுருகிக் கரையும்...
மேனி சிலிர்த்துச் சிவக்கும்...

அவர்கள்,
உன்னை ஊக்கிவித்தும்
ஆட்டுவித்துக்கொண்டுமேயிருப்பார்கள்.

காற்றைக் கிழித்தெழும் பரவசத்தில்
காது மடல் கடித்துத் தணியும் 
சிற்றின்ப இடைவெளியில்

சூதுக்களியின் காயுருட்டல்கள் நிகழும்.

அதனை அறியாமல் தந்திரர்களின்
மந்திரக் கீதத்தில் மெய்மறந்து...

நீயும்
அகலக் கால் விரித்தாடுவாய்.

ஆகாயப் பரப்பில் நீந்தி,
அரிதார சௌந்தர்ய வெளியில் 
உலாவரும் உன் இறக்கைகள்.

போதாக்குறைக்கு
ஒளிமின்னும்
ஊஞ்சல் சுகம்,

காலத்திற்குமான
இன்ப வளமெனக்
கனாக் காண்பாய்.

எல்லாம்
ஓரிரு பத்து நாட்கள்தான்...

உன் விரலேறிய விஷச்சாயம் 
உலர்ந்துவிடத் துணிந்துன்னைக்

கவிழ்த்துவிட்டுக் காணாமல் 
போய்விடுவார்கள்,
ஊஞ்சலில் உன்னைக்
கட்டிவைத்து' ஆட்டியவர்கள்.

அப்புறம்,

தாயத்தில் தொலையாத தரித்திரியம்,
உன்னைச் சாக மிதிக்க,

ஊஞ்சல் மட்டும்
ஆடிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைக் கயிறு அறுந்து.

#ரிஸ்கிஷெரீப்

 

 

தளர்ந்து தொய்யாக் காதல்!


தொலைதூரம்
கடந்தாயிற்று...

இன்னும்
குறுந்தூரம்தான்

ஆயினும்,

சலித்துவிடாது
சறுக்கவிடாது,

ஆயுள் ரேகையை
அழித்துவிடாத
பெரும் சிரத்தையோடு...

நம்பிக்கையின் நரம்பறுந்திடுமோவென்கிற
தணல் தின்னும் தவிப்போடு...

ஆழ்மனசு அழுது தொழுத 
இரைஞ்சுதல்களோடு...

அழகிய கவிதைகளால் 
வேயப்பட்ட உலகில்

அவர்களை ஆத்மார்த்தமாய் 
நகர்த்திக்கொண்டுதான் செல்கிறது

அரவணைப்பில் வசப்பட்ட
தளர்ந்து தொய்யாக்
காதல்!

#ரிஸ்கிஷெரீப்

இனிப்பான கவிதைகள்...


சையின்
இடுப்பு மடிப்பில்கூட
சொக்கித் தளர்ந்துறங்கிடாத
இரவுகள்;

அவை
இனிப்பான கவிதைகள்.

அவற்றின் அழகு
கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது.

இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான்
நம்மில் பலர்
"இரவு"களை வாசிப்பதில்லை.

"இரவு"களில் சுவாசிப்பதுமில்லை.

"சோம்பல்" போர்வைக்குள்
சிறையிருப்பவர்கள்,

அவர்கள்
இரவுகளை ஒளித்துவைத்தே
பழக்கப்பட்டவர்கள்...

நட்சத்திர ஊர்வலங்களை
தரிசிக்கவா போகிறார்கள்?
#ரிஸ்கிஷெரீப்

துயர் முடிச்சுக்கள்!

அறைகளின்
அரையிருட்டிலும்
இருட்டிலும்தான்
அதிகம்
அவிழ்ந்துவிடுகின்றன

தனித்து விடப்படும்
மனைவி,
தன் சேலைத்தலைப்பில்
மதியம் முழுதும்
முடிந்துகொள்ளும்
துயர்கள்.

காலத்துக்கும் அவிழ்வதேயில்லை...
இல்லத்தாளின் படுக்கை விரிப்பில்
இராக்களில் இடப்படும் துயர் முடிச்சுக்கள்!

#ரிஸ்கிஷெரீப்

சனி, 4 செப்டம்பர், 2021

மணப்பதற்கு மறுப்பதில்லை


ணப்பதற்கு மறுப்பதில்லை,
விலைமாது ஈரத்தலை
சூடிய அடர் மல்லிகை.

தாசிகள் நீராடும்

முகம் சுளிக்காத
தெளிந்த நீரோடைகளில்தான்

நீந்திக் கொண்டிருக்கிறார்கள்
சீதைகளும் அகலிகைகளும்!

#ரிஸ்கிஷெரீப்

மச்சமெனும் ஒளித்துளி


ரும்புள்ளிகள்
கசக்கும்
கள்ளிச்செடிகளாயின்

அகங்காரமணிந்து
கனிந்த கவிதைகளாக...

மனங்களித்து
மயக்கும்
முத்துக்களாக...

நிலவை ஸ்பரிசித்த களைப்பில்
நிர்வாணமாய் சரிந்துதிர்ந்த
ஒளித்துளிகளாக...

எப்படித்தான்
முளைத்திருக்கின்றன

மேலுதட்டு முற்றத்தில்
முறுவல்பூத்து நிற்கும்
'மச்சங்கள்' மட்டும்?

#ரிஸ்கிஷெரீப்

அ...ம்...மா


விழிகளில் நீர்
ஊறவில்லை...

பாதங்கள் தடுமாறவில்லை...

ஆயினும்

கொஞ்சம்
கனக்கத்தான் செய்கிறது...

கையில் இருக்கும் பை!

#ரிஸ்கிஷெரீப்

வர்ணங்கள் என் கைவசமில்லை கண்மணி!


ன்னைச் சுடும்
குளிர் நெருப்பு,
என்மீதும் பரவட்டும்.

உன்னை வாட்டும் பசி,
என்னையும் தின்று கொறிக்கட்டும்.

கறுப்பு வெள்ளை
கோட்டுச் சித்திரமாக
உன் கனவுகளை மட்டுமே என்னால் வரைய முடிகிறது...

மன்னித்துவிடு

வர்ணங்கள்
என் கைவசமில்லை கண்மணி!

#ரிஸ்கிஷெரீப்

'உண்மைகள்' புதைந்திருக்கின்றன...




ண்மைகள்'
புதைந்திருக்கின்றன...

'உடல்களை' அகன்று 
கொண்டிருக்கிறார்கள்.

கண்கட்டி வித்தையின்
சாயம் வெளுப்பதற்குக்கூட

'அறத்தாயி'ன்
கண்கட்டிய துணியை
அவிழ்த்துத்தான் துவைக்க
வேண்டியிருக்கிறது.

#வசீம்தாஜுதீனோ
#ஹிசாலினியோ...
அடக்கப்படும்போதும்
அகழப்படும்போதும்
எத்தனை வலித்திருக்கும்?

அத்தனை குரூரமானதாகிப்
போயிருக்கிறது...

அவர்களை அமைதியாக
தூங்கக்கூட விடாத அரசியல்?
#ரிஸ்கிஷெரீப்

அரசியல்வாதிகள் ஜாக்கிரதை!


காற்றுக்குக்குக் கூட உடன்பாடில்லை...

அரசியல் வாக்குறுதிகளை
அநியாயத்துக்கும்
தன் வயிற்றில் கரைப்பதற்கு.

காலத்துக்குமான
அதன் மிகை கோபம்

ஒருநாள்

காடு கொள்ளாச்
சூறாவளியாகச்
சுழன்றுதான்
அடித்துச் சுருட்டியெடுத்துச்
செல்லக்கூடும்

அக்கிரமக்காரர்களின்
ஆட்சிக் கட்டில்களை.
#ரிஸ்கிஷெரீப்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

புத்தகத்தின் நிலா முற்றத்தில்...


 

ன் புத்தகத்தின்
நிலா முற்றத்தில்
தழைத்திருக்கிறது...

மயிலிறகுகளால்
நான் எப்போதோ
எழுதிச் சொருகிய
கவிதைச் செடி.

இப்போதும்

அவ்வப்போது
யாரும் கவனிக்காத
தருணங்களில்...

பதற்றத்தின்
மிருதங்க ஓசையில்
தடுமாறிச் சுழன்றபடி

உன் விரல்கள்
அதனை வருடி
வாசிக்கும்போதெல்லாம்,

செக்கச் செவந்து ஜொலிக்கத்தான் செய்கிறது...

நாணத்தின்
நடுநெற்றிப் பொட்டு!
#ரிஸ்கிஷெரீப்

தேகத்தணலும் ஒரு கவிதையும்...




ழைநாளில்

உனக்கு பரிசளிப்பதற்கும்
உன்னிடம் பரிமாறிக்கொள்வதற்கும்
என்னிடம் எதுவுமேயில்லை...

தேகத்தணலும்
ஒரு கவிதையும்
சிறு குடையும் தவிர!
#ரிஸ்கிஷெரீப்

'கை வலி'யும் கண்ணீரும்!


 
னித்த ஆளாக

அடித்துத் துவைத்து
கசக்கிப் பிழிந்து,

கயிற்றுக் கொடியில் உலரவிட்ட
முரட்டுத் துணிகளின்
ஈரத்தோடு கசிகிறது...

அம்மாவின்
'கை வலி'யும்
கண்ணீரும்!
#ரிஸ்கிஷெரீப்

' நீ இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்!'


 

யிர்போகும்
தாங்கயியலா வலி...

உச்சஸ்தாயியில் கதறுகிறேன்...

ஆயினும்;

எனது எரிச்சல்மீது
ஒரு புன்முறுவலை உதிர்த்துத்தான்
அகன்று செல்கின்றன
உறவும் சுற்றும் சூழலும்.

இப்போதெல்லாம்....
'வலி' என்பது

வார்த்தைகளுக்குள் மட்டுமே வசப்பட்ட
வர்ணிக்க வலுவற்ற சொல்லாகத்தான்
இருந்துகொண்டிருக்கிறது.

அதன்
ஆழர்த்தம் புரிந்த

'அம்மா...
நீ இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம்!'
#ரிஸ்கிஷெரீப்

மேலாடை களையாத என் பேனா!

னிப் பருக்கள்
பூத்து...

இதழ்கள் வெடித்து,

பூப்பெய்தக் காத்திருக்கும்
ஓர் செம்மலர் மொட்டை

களித்து வரைந்து களைத்த அயர்ச்சியில்

தலைக்குக்கூடக் குளிக்காமல்
ஒருக்களித்துப் படுத்திருந்தது தூரிகை.

முட்களை வரைய
முடியாதென்று வேறு
முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது.

அதற்கான கவிதையை
எழுத வெட்கித்துத் தொய்ந்து...
உட்கார்ந்திருக்கிறது

இன்னும் மேலாடை களையாத என் பேனா!
#ரிஸ்கிஷெரீப்

 

ஆணிப்பைகளை அவிழ்த்துவிடும் அவர்கள்




'அந்தமாதிரி'
அவ(ள்க)ளுக்குள்ளும்
ஒரு மனசிருக்கு

வீதிகளில்
பேரம் பேசினாலும்

அவள்(கள்)
அவிழ்த்துவிடுவது
அறைகளுக்குள்தான்

வீதிகளில்
விசர்நாய்களையும்
ஆணிப்பைகளையும் அவிழ்த்துவிடும்....

'ஒருமாதிரி'யான
இவர்களை விடவும்

சிறந்தவள்(கள்)

'அந்தமாதிரி'யான
அவள்(கள்) .
#ரிஸ்கிஷெரீப்

மகளிர் தினம்


 

தம் வாசம் தெறித்தெகிறாத
தூரமொன்றில்,

இற்றைக்கு
மட்டுமாவது

ஆண்களையெங்காவது
ஒளிந்து கொள்ளச்
சொல்லுங்கள்...

சந்தோசமோ
சங்கடமோ...

நம்மட பெண்கள்
கொஞ்சம் தனித்துணரட்டும்...

தனித்துலாவி வரட்டும்!

காதலின் கடைசிச் சொட்டு


 
ந்த நதி
நகர்ந்துகொண்டிருந்தது...

நனைந்து
கதறக் கதற
என்
கவிதையைக்
கசக்கிக்
கழுவியழித்து,

அந்த நதி
அதன்பாட்டுக்கு
நகர்ந்து....
கொண்டுதானிருந்தது

நகராமல்...

ஈரப்பார்வையை
நீர்மீதும்

இயலாமையை
தரைமீதும்

கடுஞ்சினத்தை
காற்றின்மீதும் வைத்திருந்தேன்.

விரலிடுக்குப் பேனாவில் இருந்து
கசிந்துகொண்டிருந்தது
காதலின் கடைசிச் சொட்டு.

மீளவும்

ஒரு காகிதத்தையும்
ஒரு கவிதையையும்
நான் எங்கு தேடியலைவேன்?

இல்லை...

எனக்குள்
எங்கிருந்துதான்
ஊற்றிக்கொள்வேன்
இன்னுமோர் காதலை?

புழுதி பறக்கக் கிளம்பிவரும் காற்றிலோ
ஒரே திக்கில் நகரும் நதியிலோ
தெலைப்பதற்காகிலும்.
#ரிஸ்கிஷெரீப்

கொடிய விஷம்


அனாதை
என்கிற
உணர்வில்
எழும் 'வலி';

அது....

ஆயுளைக்
கரைக்கும்
கொடிய விஷம்!

" நல்வரவு"


 
ழுக்குக் காலகற்றி,

எம்பிக் குதித்து,

காலத்திற்கும்
கடந்தே செல்ல வேண்டியிருக்கிறது...

கால் மிதிப்பில் களங்கப்படுத்தப்பட்டிருக்கும்

" நல்வரவு"
என்கிற நறுமண வார்த்தைகளை!

#ரிஸ்கிஷெரீப்

வியாழன், 2 செப்டம்பர், 2021

வசியம் செய்தாயோ?

அப்படியென்னதான் 'வசியம்' செய்து வைத்திருக்கிறாய்...
அவ்வப்போது
எனக்குள்
'குட்டித் தூக்கங்களை'
ஊட்டிவிடும்
உனது அகன்ற தோள்களில்?

 

நிர்வாணத்தின் முதுகுகளில்...


ஆபாசக் கவிதைகளாக...
ஆடை களைந்து

அலைந்து திரிவது
ஒன்றிரண்டுதான்.
மற்றப்படி,
மஞ்சள் குளித்து
மங்களம் உடுத்தி
மல்லிகை மணக்க
நடுநெற்றிப் பொட்டிற்று
நாணம் சிவக்கத்
தலை தாழ்த்தித் தரையில்
மருதாணி விரல் மெழுகக் கோலமிடும் 'ஹைக்கூ' க்களும்,
'அக்னி'யுதட்டிடுக்கில்
அழுந்தக் கடிபட்டுக் காயப்பட்ட
மூச்சுக்காற்றின்
இறக்கைகள் கொண்டு
நிர்வாணத்தின்
முதுகுகளில்தான்
எழுதப்பட்டிருக்கின்றன.

அநியாயக்காரனின் கதிரை


செந்தணல்
முகம் சிவக்கச்
சினம் கொண்டிருக்கும்
நெருப்புக்கும் மனசில்லை...
விறகுகளாக எரிவதற்கும் தகுதியற்ற,
அநியாயக்கார்களின்
கதிரைகள் மீது
பற்றிப் படர்வதற்கு.

 

இனிப்பான இரவுகள்


 

இசையின்

இடுப்பு மடிப்பில்கூட

சொக்கித் தளர்ந்துறங்கிடாத இரவுகள்; அவை இனிப்பான கவிதைகள். அவற்றின் அழகு கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது. இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான் நம்மில் பலர் "இரவு"களை வாசிப்பதில்லை. "இரவு"களில் சுவாசிப்பதுமில்லை.
"சோம்பல்" போர்வைக்குள் சிறையிருப்பவர்கள்,

அவர்கள்

இரவுகளை ஒளித்துவைத்தே

பழக்கப்பட்டவர்கள்...

நட்சத்திர ஊர்வலங்களை தரிசிக்கவா போகிறார்கள்? #ரிஸ்கிஷெரீப்

திரை மூடித் திறந்தால்தான் தெரியும்


அழுகைக் கடல் மூழ்கிச்

சோர்ந்துவிட்டேன். துயர் தணிக்கவும் திராணியில்லை. கைநழுவியறுந்த ஒளிமின்னும் மணிமாலையின் முத்துக்களாக... ஒன்றன் பின் இன்னொன்றென உதிர்ந்து கொண்டிருக்கின்றன உயிர்கள். திரை மூடித் திறந்தால்தான் தெரியும் மரணம் தன் மன்றுக்கிழுத்துவரும் அடுத்தவர் யாரெவரென. #ரிஸ்கிஷெரீப்

மரணித்துவிடுவதே நல்லது....




மண்ணையும் மண்வெட்டியையும்
அபகரித்துக் கொள்வதற்குள்
மரணித்துவிடுவதே நல்லது.
#ரிஸ்கிஷெரீப்
(சீனியைப் பதுக்கி, விலையேற்றத்திற்கு வழிவிட்டு... நோயாளியைக் குற்றம் சாட்டுவதுபோல,
மண்ணும் மண்வெட்டியும் இருந்தால்தானே 'அடக்கமும் நல்லடக்கமும்'...
இழந்துவிடும் பட்சத்தில்
'எரித்துக் கொளுத்தலாம்'
என்கிற காழ்ப்புணர்ச்சியோடு...
'வேதாளம்' மீளவும் முருங்கை மரமேறக்கூடும் என்கிற அச்சம் தவிர்க்க இயலாதது.
நம்ம ஊரின் சிறு பிள்ளைத்தனமான, 'அரசியல் வடிவமைப்பு' அப்படி...)

'மஜ்மா' மணக்கிறது....




நெருப்புத் துண்டங்களாகத்தான் விழுங்க வேண்டியிருக்கிறது...

மரணச் செய்திகளையும். 'மஜ்மா' மணக்கிறது... இனம்புரியாத யார் எவரோ, தொடர்ந்தும் பழுக்கக் காய்ச்சிய இரும்பை முதுகு முள்ளந்தண்டில் சொருகி... தலைக்குள் சம்மட்டியால் அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புத்தி மழுங்கி பூச்சியத்தில் நிற்கிறது. தரை சுழன்று பாதம் நழுவுகிறது... விழிகளுக்குள் நட்சத்திரங்கள் பறக்கின்றன. நாசிக்குள் 'மஜ்மா' மணக்கிறது. #ரிஸ்கிஷெரீப் 23,09,2021 #majma #ottamaavadi #riskyshareef

புதன், 1 செப்டம்பர், 2021

எத்தனை காலம்தான்...

 


எத்தனை காலம்தான் 

முடிந்து வைத்திருப்பாய்... 

உன் சேலைத்தலைப்பில் என் கவிதையை

கொஞ்சம் அவிழ்த்துவிடேன்... 

வெளியேறிக்கொள்கிறேன். 


ரிஸ்கிஷெரீப்

31. 08. 2021

முறியாத இரவு



தொலைதூரமொன்றில்
வெட்கித்துப் பதுங்கி....

நாணப் பொட்டகற்றி, நிர்வாணமணிந்து

தலைக்குக் குளித்துக் கொண்டிருக்கிறதா ஒளி?

இங்கே...
இறங்கத் தயங்கி

இருட்டின் கிளைகளை
இறுக்கியணைத்து
உட்கார்ந்திருக்கிறது
பயம்.

இரவு இப்போதைக்கு
முறிந்தபாடில்லை.

தூக்கம் என்னைக்
கடித்துக்குதறி 

வெளியே துரத்திவிட்டிருக்கிறது;

ஒரு வெறிநாயின்
சீற்றத்தோடு.
#ரிஸ்கி ஷெரீப்