அன்பான
அன்னையே...
இக்கவிதை
இன்றிலிருந்து
உனக்கோர்
ஆற்றுப்படை.
உனைப்பற்றி
எழுதும்போது
என் பேனா -
கர்வம் கொள்கிறது
மை கூட -
மையல் கொள்கிறது
நான் -
மரியாதை கொள்கிறேன்.
வாழ்க்கை அங்கு
செளந்தர்யமாயிருக்கும்...
கவிப்பூக்களையிங்கு
காணிக்கையாக்குகின்றேன்.
பதிவு செய்து -
பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
உனது -
வாழ்நாள் பேச்சும்,
மனிதம்களில்
மணக்க ம்ணக்க
வாழ்ந்து கொண்டேயிருக்கும்
- மூச்சும்
உனக்கான
ப்ரார்த்தனைகளாக
இருக்கின்றன்.
தாயே...
செத்துச் செத்துத்தான்
வாழ்க்கையென்றாலும்
- இங்கு
நான் நலம்.
நாம் நலம்.
நலமறிய ஆவல்...
நீ -
மறைந்துபோன
நாள் முதலும்
இங்கு பிரசவங்கள்
நிகழ்கின்றனதான்...
ஆனால்
இடுப்பு வலி
அவஸ்தை மட்டும்
அப்படியேதானிருக்கிற்து.
பரந்தவெளிக்
காற்றில் வீசும்
உன் -
சுவாசத்தின்
வாசம்
உணரும்போதெல்லாம்
நான் கால்களால்
நடப்பதை விடவும்
உணர்வுகளால்
நடப்பதே அதிகம்.
அந்த -
உணர்வுகளுக்கு
உயிர் தந்தவள் நீ...
அமில
அதிர்ச்சியூட்டப்பட்ட
என் ஆத்மா
கரையும்முன்...
தூக்குக் கைதியின்
கடைசி ஆசையாக -
ஆவலாகக்
கேட்கின்றேன்
தங்கத்தாயே
இக்கணம்
நலமாயிருக்கிறாயா?
வாழப்பிறந்து
இறந்தவர்களுக்கு
மத்தியில்
நீ -
ஆளப்பிறந்து இறந்தவள்.
பொண்ணு பூப்பெய்திய
தாயின் சநதோசத்தோடு
தேசங்களை அரவணைத்து
தேகத்தில் மெலிந்தவள்.
பாசக் கயிற்றின் மீது
மட்டுமே
நடக்கத் தெரிந்திருந்த உனக்கு -
பள்ளங்க்ள் உள்வாங்குமோ
என்கிற -
பயமில்லாதிருந்ததால்தான்
நீ -
கடைசிவரைக்கும்
விழாமலேயே
இருந்திருக்கிறாய்.
அரசியலும்
அதிகாரங்களும்
உன்னிடம்
தோற்றுப் போனபோதுகூட
நீ நீயாகத்தான்
இருந்திருக்கின்றாய்...
நீயாகத்தான்
இறந்துமிருக்கின்றாய்.
உன் பணிகளோடு
உனக்குள் மூப்பு வந்து
இறப்பும் வந்தது
சிறப்பாய்...
இறப்பு என்பது
கறுப்பல்ல -
அடுத்தவுலகுக்கோர்
மொழிபெயர்ப்பு.
ஆக -
உன் நினைவுகளை
அருந்தி வரும்
விக்கல்
கண நேரத்தில்
கேட்கிறேன்...
" சகலருக்குமான
அன்னையே -
நலமாயிருக்கின்றாயா?'
இங்கே -
உனையிழந்து
சொற்களுக்குள் சிறைப்பிடிக்க
என் எழுத்துக்கு வலுவில்லை
- என்றாலும்
சுகமான அவஸ்தையாய்
உன் ஞாபகங்களை மட்டுமே
இன்னமும்
தாலாட்டிக் கொண்டிருக்கின்றேன்.
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
31.10.1999
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக