மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 5

      [ஐந்தாவது அங்கம்]


உயிரலறுகையில்
எழும் -
தொண்டைக்குழி
விக்கலானது
- வாழ்க்கை.

சங்கு ஊதி
சடங்குகள்
அடங்கியும்
முடங்கியேயிருந்தாள்
- பஞ்சவர்ணம்.

வறுமை
அழியாக் -
கரு' மை' யா?

இல்லை
அழிக்கும் -
கந்துவட்டிக் கடனா?

இவள் குடிசை
விலாசம் -
தேடியலையாமல்
அழையாமல்
வந்தமர்ந்து
- கொண்டது.

பரிதாபம்
உணரத் தெரியாத
கல்நெஞ்சுக்காரன்...

படுத்திய பாட்டில்
எழுந்து -
உயிரிழந்து
ஓடத் துணிந்தவளை,

அணைத்து
அமர்த்தியது
' தாமரை'.

பாசத்தைப்
பச்சை குத்திய
பச்சை மண்.

நரகத்திலாயினும்
வாழச்சொன்ன
- சொர்க்கம்.

அதன் -
மழலைச் சிரிப்பில்
இவள் முலையிலன்றி
வயிற்றில் -
பால் சுரந்தது.

மூச்சுத் திணறத்
திமிறிய பசியில்
அச்சம் பிதுங்கியது.

அடுப்பங்கரையில்
பூனை சுருண்டது.

பஞ்சம் பிழைக்கத்
துணிந்தாள் -
பஞ்சவர்ணம்.

செங்கல் சூளைச்சேறு
தன்னை மிதிக்கக்
கூப்பிட்டது.

வறுமை உதிர்க்கக்
கூப்பிட்டது.

முருகேசு
மூச்சு விட்டயிடத்தின்
வாசம் பிடித்துழைக்கக்
- கூப்பிட்டது.

கண்கள் குளமாகக்
குளிர்ந்து -
நடை தளர்ந்து
ஓடினாள்.

-------   --------   --------  ---------

சூளையைப்போல
அதன் -
சொந்தக்காரனுக்கும்
தீயும் -
சேறுமான மனசு.

தனித்திருந்ததோர்
மழை பிடித்த
மாலையில்
சனி பிடித்தது.

அலறலை அடக்கிய
இடியின் பிடிக்குள்...

சாராய -
நெடியுடன் கூடிய
இரும்புப் பிடிக்குள்...

காமத் தீப்பிழம்புகளில்
கசங்கிக் -
கருகியெரிந்தது
அந்த வெண்பஞ்சு.
[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
16.11.2009

செவ்வாய், 10 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 4



       [நான்காவது அங்கம்]


தாலி கேட்ட
வைர மூக்குத்திக்கு
தன்னையே கொடுத்தது
அந்தக் -
கறுப்புத்தங்கம்.

அம்மி மிதித்து
அருந்ததி -
பார்த்துச்செய்த
திருமணம்தான்...

மணத்த -
மணவாழ்வு
இனித்ததில்...

இருவரும்
சமபங்கில் ருசித்த
இரவுகள்
வெட்கித்தன.

ஒருசேர -
முத்துக் குளித்ததில்
மலர்ந்தது
ஒற்றைத் ' தாமரை '.

இருபாலில் முளைத்த
பெண்பால் முத்து.

அவர்கள் -
அவர்களுக்குள்
புதைந்து தேடிக்
- கண்டெடுத்த
புதையல்.

விரல் நொடிக்கக்
காலம் கரைந்து...
தவழ்ந்தது ' தாமரை'.

யார் -
கண்பட்டு
எந்த -
வயிறெரிந்ததோ?

செய்வினைகள்
பலித்து -
சூனியக் கல்
தெறித்ததோ?

ஒருநாள்,

விதி -
சதி செய்த
விபத்தில்...

ஆணியறைந்து
அடங்கியது
அவர்களில் -
இழையோடியிருந்த
-காதல்.

காலையில்
செங்கல் சூளைக்குச்
சென்ற -
கறுப்புத்தேக்கை
மாலையில்
கரிக்கட்டையாகச்
சுமந்து வந்தன
சில மரக்கட்டைகள்.

கட்டழகன் முருகேசை
சுட்ட கருவாடாக
மொழிபெயர்த்துத்
தப்பியிருந்த
சாத்தான்...

பஞ்சவர்ணத்தின்
நெஞ்சு பிரித்துக்
குருதி புசித்தது.
.
காதலுக்குக்
கடன்பட்டவளாய்
உடன்கட்டை
ஏறத்துடித்தது
சந்தனக்கட்டை.

தடுக்கிவிழத்
தடுத்தது -
' தாமரை 'த் துடிப்பும்
அதன் -
கன்னக்குழிச் சிரிப்பும்.

                     [தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
10.11.2009

சனி, 7 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 3

 [மூன்றாவது அங்கம்]


முறுக்கு மீசையும்
முறுக்கேறிய தேகமும்
கறைபடியாத -
மனசுமாயிருந்த
கறுப்பழகன்தான்
முருகேசன்.

பூவிலங்கு முரளியைக்
கடைந்தெடுத்த -
செங்கல் சூளையில்
வெந்துழைக்கும்
தொழிலாளி.

மலையோரம் நதியோரம்
வயலோரம் வைக்கோல்
- குமியலோரமெல்லாம்...

கண்ணி வைத்துக்
காதல் வலைவீசிய
கன்னிகளிடமிருந்து
நழுவிக்கொண்டிருந்த
இந்த மீன்...

மணமான
மலைக்காட்டு மனுசிகளின்
மோக அலையிலேயினும்
எப்போதும்
அடிபட்டுப் போனதில்லை.

தவிர்க்கத் தவிர்க்கத்
துளிர்த்த
தவிப்பில்...

காமமிழைந்த இரவுகளில்
கணவன் நுகர்கையில்
இவனையுணர்ந்து
சுகித்த பெண்களும்
இங்கு அதிகம்.

எனினும்
உளியில் துளையாத
இரும்பு -
` பனியில் கரைந்தது.

காதல் எறும்பூறிக்
கற்குழிந்து
குளிர்ந்தான்
கற்புக்கரசன்.

அவையின்
முரட்டுச்
சப்தமொடுக்கிய
கொலுசுச் சங்கீதமாய்...

மலட்டுப் பெண்
வயிற்றில் தங்கிய
மகவாய்...

காட்டாற்று
வெள்ளத்தையும்
மறித்துப் போட்டது
தாவணி அணை.

பஞ்சவர்ணம்
கிறுக்கிய சித்திரத்தை
இந்தக் -
கறுப்புத் தேக்கு
தன்னில்
செதுக்கிக் கொண்டது.

மயக்கும் மாலை
வெயிற்பொழுதுச்
சந்தையிலொருநாள்...

ஆசையாய்
வளையல் வாங்கிக்
கொடுத்த முருகேசின்
மீசை வருடி...

அவன் மார்
மயிர்த்தோப்பில்
முகம் புதைத்து...

குங்குமம் தெறிக்கும்
சிவப்பில்
நாணம் நனையக்
கேட்டாள் பஞ்சவர்ணம்
'' வளையல் மட்டுமா
கழுத்துக்குத் -
தாலி தரமாட்டாயா?"
                [தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
07.11.2009

வியாழன், 5 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 2

 [இரண்டாவது அங்ம்]


ஞ்சவர்ணம்...

பாரதிராஜா
கொத்திப்போகத் தவறிய
பாரிஜாதம்.

புறத்தோலுரிந்த
மரவள்ளி நிறத்தில்...

கொவ்வையிதழ் மேல்
நட்சத்திரமாய்
கருமச்சமும்...

காந்தமாய் ஈர்க்கும்
கருவண்டு விழிகளும்...

சிரிக்கையில்
தடுக்கி -
விழத்தோன்றும்
வலக்கன்னக் குழியும்...

பாம்பு -
நெளிந்ததாற்போன்ற
மடிப்புக் கலையாத
ஒடிந்துவிடும
இடையும்...

திமிறித்
திணறும்
மாரும்...

நெய்
குழைத்துச் செய்த
சிலையாய்...

அழகிய பிறப்பின்
அதிசயங்களில்
ஒன்றாய்...

இருபது வயதிலிருந்த
இந்த இனிப்பான
நிலவுக்கு
இன்னுமோர் பெயர்தான்
பஞ்சவர்ணம்.

மலைக்காடே
நுகர்ந்து பார்க்கத்
துடித்த -
கஞ்சாக்காடு.

கிராமத்து
அழகுராணிப்
- போட்டிகளின்
அனைத்துக்
கிரீடங்களையும்
தன் தலைமேல்
அமர்த்திக் கொண்ட
அற்புத அழகி.

அழகிய தீ
வடிவமைத்த
தென்றல்.

இந்தத் தென்றல்
தெருவிறங்கக்
காத்திருந்து -
முளைக்கும்
யன்னல் விழிகள்...

தம் மனசுக்குள்
அசிங்கம் செய்து
தடுமாறிய போதும்,

தடம் மாறாமல்
நிறம் மாறாமல்
இருந்த
வைர மூக்குத்திதான்
இந்தப்
பஞ்சவர்ணம்.

இருந்தபோதும்...

இந்த
வைர மூக்குத்தியை
தன் உயிரில்
உயில் எழுதிக்கொண்டது
ஒரு -
கறுப்புத் தங்கம்.

மலைக்காட்டில்
விளைந்த -
இருபத்தி நான்கு
வயதுச் சொக்கத்தங்கம்.

செங்கல் சூளைக்கு
மண் மிதிக்கச்
சென்றவளை மீறி
ஏறி மிதித்து
அமர்ந்து கொண்ட
- காதல்...

கடைசிவரைக்கும்
அவளைக்
குப்புறப்படுத்தியேதான்
க்ருக்கொண்டது.

[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
05.11.2009

செவ்வாய், 3 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 1

[முதலாவது அங்கம்]



ந்த -
அழகிய கிராமத்தை
மசக்கைப் பெண்ணாக
உட்கார வைத்த-
நெடுநாள் மழையை
எடுத்துச் சென்றது
நடுநிசியிரவுக்
காற்று.

ஊரையே
கழுவித் துவைத்த
மழையின் சுவடுகளையும்
வந்த வேகத்திலேயே
துடைக்க முயன்று
தோற்றுமிருந்தது.

அரிதாரம் பூசாத
ஊருக்குள்-
அழையாமலாயினும்
பகல் விருந்தாளியாய்
நுழைந்த மழை...

' அந்த ஏழு
நாட்களுக்குப்' பிறகும்
ஏதோ -
தயக்கம் காட்டித்தான்
போயிருக்கிறது.

ஆரத்தழுவி-
வருடியணைத்து
நனைத்துப் பிரியும்
அற்புத மழை...

இம்முறை -
வெறியாட்டம் போட்டுத்தான்
அடங்கியிருக்கிறது.

நடுவகிடெடுத்து
வாரிய -
வயல்வரப்புக்
கூந்தலையும் கலைத்து...

விரிந்த குடைகளையும்
முள்ளந்தண்டில் உடைத்து...

போதையில் இருந்ததா
- மழை ?

அதன்
மூர்க்கப் பிடிக்குள்
மூச்சுத் திணறித்
தவித்தழுதது
அவ்வழகிய கிராமம்.

மழைக் குளிர்ச்சுகத்தில்
ஊருக்குள் சிலர்
இன்னும் -
தூங்கிப்போயிருந்தார்கள்.

மழைக் குளிர்ச்சோகத்தில்
ஊருக்குள் பலரும்
இன்னும்
பட்டினி கிடந்தார்கள்.

குடலில் பசித்தவர்களுக்கு
மத்தியில்
இந்தக் குளிரில்
உடலில் பசித்தவர்களும்
இருந்தார்கள்.

முதுகுப் பரப்பில்
நகக் கீறல்களை-
வாங்கியிருந்த
பூஞ்செடிகள்
விடிந்த பின்பும் வெட்கித்
தலைகுனிந்திருந்தன.

நாணமாய் -
அவற்றின்
கால் விரல்க் கோலமாய்த்
தெரிந்த புற்கள்மீது
பனி பூப்பூத்திருந்தது.

சின்ன இடைவெளியில்
பாய்ந்த பெருவெள்ளத்தில்
கால்வாய்களுக்கும்
வலியெடுத்திருக்கும்.
.
அவசர அவசரமாய்
அணைத்து முகர்ந்து
ஆலாபனைச்
சுகம் உண்டு
புரண்டு படுக்கும்
ஜடம்போல...

வந்தது
வரமென்று
அனுபவித்த பின்பு,

ஊருக்குள்
தப்பாகப் பேசவும்
ஆரம்பித்திருந்தார்கள்.

எப்படியோ...
' அப்பாடா 'வென்று
இரவோடிரவாக
அடித்து விரட்டியிருக்கிறது
- காற்று.

காதலாய்க் கசிந்துருகிக்
கசங்கி வியர்த்துக்
களைத்துக் குளித்துவந்த
புதுமணப்பெண்போல...

விடிந்து
பார்க்கையிலும்
அழகாய்த்தானிருக்கிறது
மழைக் காடாகிப்போன-
மலைகள்
முக்காடிட்டிருந்த
அந்த-
'மலைக்காட்டு'க் கிராமம்

செம்மண் தரைகளிலும்
மணத்தது -
மழை மிச்சம் வைத்துச்
சென்ற வாசம்.

வானமழுதது
பொறுக்காமல்
தரை தொட்டிறந்திருந்த
இலைகள்-
அழுக ஆரம்பித்திருக்க...

சற்றைக்கு முன்
பஞ்சு மரமுதிர்த்த -
பழுத்துக் காய்ந்த
இலைகளும்
காற்று வெளியிலேயே
கொஞ்சம் -
நின்று நிதானித்துக்
குளிர்காய்ந்துகொண்டன.

சேறு பூசாத
தெருப் பருக்கள்
தாண்டிச் சிலயிடங்களில்
தேங்கியிருந்த
' தெளிந்த நீரில்'
தெரிந்தது
நடுநெற்றியில் இன்னும்
சூரியப்பொட்டு வைக்காத -
கண்ணீர் துடைத்திருந்த
- வானம்.

அழுத களைப்பில்
கொஞ்சம் -
கறுத்துத்தானிருந்தது.

---------   --------   --------   ----------

ர் நனைத்துக்
கூரை வடித்த -
வானக் கண்ணீரைப்
பருகி மாய்ந்த
குடில்களின் கதைகளும்...

மழைக்காலம்
உணர்வெரித்து
உடல் கொதித்துக்
குளிர்ந்த
உடல்களின் கதைகளும்...

இந்த -
மலைக்காட்டுக்
கிராமத்திலுண்டு.

பஞ்சவர்ணக் கதை
இதில்
இரண்டுமான ரகம்.

[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
03.11.2009