என் மனசு குடித்த
மனசைக் குடித்த
- மகாராணி...
மனசு
மணக்க மணக்க
எழுதும் மடலிது.
நான் இப்போதெல்லாம்
எனக்கே நானில்லை.
வயதுகள்
சிதறிச் சிதறி
தடதடவென
ஓடுது காலம்.
உனது 'நான்'
உனக்குத் தெரியாமலேயே
இறந்துவிடும் நேரம்...
அந்தச் சாவு
உனக்கு,
உலகம் முழுவதும்
பரந்து விரிந்து விளங்கும்
உனது 'உண்மை நானின்'
பரப்பள்வை உணர்த்தும்.
பல கோடிப்
பெறுமானத்தில்
கொட்டிச் சிதறிப் பூக்கும்
உன்னில் நான்
கோடிமுறை
காணாமல் போனதுண்டு.
அதேநேரம்,
அடைகாத்து முதிர்ந்தவளாய்
அடிக்கொருதரம் நீ
உணர்ச்சிவசப்படுவதிலும்
அவ்வபோது
சிதறிப்போனதுமுண்டு.
மனசு
மணக்க மண்க்க
எழுதும் மடலிது
மகாராணியே
புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டுக்குள்-
வாழ்வின் பூட்டுக்குள்
வ்சித்துக்கொண்டே
உன் அன்னையும்
அண்ணனும் பார்க்கும்
மாப்பிள்ளைக்கு
'ஆம்' சொல்லாதே.
ஆடைதான் அழகு
முகமூடிதான் முகம்
- என்று
நம் காதலை
உயில் எழுதி
அகண்ட உலகைப்
போலியாக
அனுபவிக்க ஆசையென்றால்
' ஆம்' சொல்லு.
ஆறாம் விரல்போல
அவர்கள்-
ஏதோவொன்றைத்
தேடுகிறர்கள்.
இதழ்கள் இனிப்புத்தான்
உனக்கும் எனக்கும்.
அவர்கள் சொல்கிறார்கள்
-என்பதற்காக
உன் உதடுகள்
சந்தோச ரத்தமா
குடிக்க வேண்டும்?
காதல் கோமாவில்
நம் அறிவின்
குரல்வளை
அறுபடக் கூடாது.
சாம்ராஜ்யம்
என நீ-
சந்தோசப்படுகிற
சமையலறை
உனககான
சதிச்சிறை.
இரக்கத்துகுரிய
தோழியே...
தண்டவாளங்களும்
ஆழக்கிணறுகளும்
கயிறு முடிச்சுக்களும்
நம் காதலின்
கல்வெட்டுக்களாகக்
-கூடாது.
என்றாலும்,
நான் -
இரவுகளை
கொறித்துத் தின்று
கொண்டிருக்கும் சப்தம்
உனக்கு மட்டும்தான்
கேட்கும்.
நம்மையே
பிசைந்து பிழிந்து
விருந்து வைத்த...
வியர்வை
மணத்த கதை
எப்போதும் -
அவர்களுக்குப் புரியாது.
மனசில் அலையடிக்க
மவ்னமாயிருக்கச் சொல்லி
வார்த்தையையும்
வாழ்க்கையையும்
ஒருசேரத் துண்டித்தவளே...
" பேச வேண்டாம்...
ஜென்மத்துக்கும் -
பேச மாட்டேன்..."
என்று -
வேதனைகளைத்
துப்பிச் சிதைத்தவளே...
பேசாமல் -
இருந்தால் மட்டும்
அனாதை விருந்தாளியாய்
காதல் வெளியேறுமா?
நீ -
மேய்ந்து
பார்க்க வேண்டும்
என்பதற்காகத்தான்
வெள்ளைத் தாளின்மீது
இங்கு நான்
வேளாண்மை செய்கிறேன்.
அழகுகளில் ஆர்ப்பரித்து
மனசு காணாமல்ப்போன
இடங்களில்
நான் உடம்பு தொலைத்ததில்லை,
உடம்பு தவறிய தறுணங்களில்
நான் மனசு
தொலைத்ததுமில்லை.
ஒருசேர
இரண்டையும்
தொலைத்தது
உன்னிடம்தான்.
இப்போதெல்லாம்...
ஏராளமாகச் சிறகுகள்
இருந்தும்
இருப்பதோ கூண்டுக்குள்.
அடிக்கடி -
நீ சொல்லும்
' அமீஷாவும் '
'அமித் ' அண்ணாவும்...
அவர்களுக்கும்
நம்மைப்போல
அலுக்காத காதல்...
ஒத்துழைக்கும் உடம்பு...
ஏராளக் காசு...
எனினும்,
மாறாத புத்தி...
மற்றபடி -
மனம்போல
மணவாழ்வில்
அவர்கள்
இணைவார்கள் என்றே
- தோன்றுகிறது.
நாம்....?
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
19.08.2001

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக