மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 அக்டோபர், 2009

நானும் கடுங்குளிரில் சஹீதாக வேண்டும் !


மக்கா மண்ணில்
நானும் கடுங்குளிரில் சஹீதாக வேண்டும் !

ஹஜ்ஜுக்காக
ஒரு (க)விதை விதைக்க
என் பேனா உழும் பொழுதில்,
தவிர்க்க முடியாமல்
தவிக்க வைப்பதாய்....
அனல் மூடிய தவிட்டுச்
சாம்பரில் கால்வைத்ததாய்...
அமிலத் துளிகளில்
மனசு-
ஆழமிழ்ந்து போனதாய்...

அதேகணம்; மக்கா மண்ணின்
பாலைக் குளிரில் யானும் சஹீதாக
வேண்டுமென்று
தேகம் முழுக்க
ஊற்றெடுத்தூர்ந்து தெறிப்பதாய்...

இனிப்பாயும் கசப்பாயும்
ஒரு வலி பரவுகிறது !

*

அவர்கள்,
இந்திய தேசத்தின்
ஹஜ்ஜாஜிகள் !

புனித கஃபாவாலயத்தை
சந்தித்தழுது
தொழ வந்தவர்கள் !

நபி இப்ராஹிமின்
தியாக நெருப்பில்
குளிர்காய்ந்துணர்ந்து
திருத்த வந்தவர்கள்...
பாலையில் குளிர் சுட்டே
சஹீதாகிப் போனதில்;

தவிர்க்க முடியாமல்
தவிக்க வைப்பதாய்....

*

இந்திய மண்ணின் இறையடியார்கள்
அந்த இருபத்தேழு பேரும்,
இஹ்ராம் அணியும்போதே
அதுதான் தமக்கான கபனென்று
கனாக் கண்டார்களோ?

சீரழிந்து கிழிந்தவுலகின்
மறுபதிப்பாக வெளியிட
முடியாத வாழ்க்கையின்,
பிழைகளைத் திருத்தமுடியாது
தவித்துக் கசிந்துருகி...

பாவக்கறை கழுகி,
பச்சிளம் பாலகனாயாகிலும்
திரும்பி வராமல் -

மக்கா மண்ணிலே
மரணம்தான் வேணுமென
மன்றாடிக் கேட்டார்களோ....?

மணக்க மணக்க
நல்லமல் பீய்ச்சித்
தம்முயிரில் தீப்பிடித்துத்
தெளிந்தார்களோ...?

எஃதோ,
துல்ஹஜ் துடித்துப்
பிறந்து நான்காம்
பிறை விடுவதற்குள்,
பாலைமண் கசியச்
சுரந்த குளிர்
குருதியுறையாமல்
உயிர் எடுத்துப் போயிருக்கிறது

இன்னாலில்லாஹி...

*

மாரில் பால்சுரக்கப்
புனல்தேடிப் பரிதவித்துப்
பாதம் பதித்தோடிய
நாயகி ஹாஜராவாய்,
ஸ்ஃபா, மர்வாவிலொரு
தொங்கோட்டமின்றி...

உயிர் துளும்பி-
நாசு வைத்து நனைக்கத்துளி
ஸம்ஸம் இன்றித்தான்
அவர்கள்,
அல்லாஹ்வின் கஃபாவை
தரிசிக்கச் சென்று
குளிர்வாங்கித் தம்முடல்களில்
மடிந்து போனார்களோ?

லெப்பைக்
அல்லாஹும்ம லெப்பைக் !

கற்கண்டுத் தகிப்பாய்
இலக்குத் தேடிய
அவர்களது பயணத்தை,
அல்லாஹ்-
ஜன்னதுல் பிர்தவ்ஸுக்கு
இட்டுச் செல்வானாக !

அதே நேரம்;
ஆலாய்ப் பறக்கும்
மனசு அடக்கி
அடுத்த ஹஜ்ஜிலாவது
அந்த அரபு மண்ணில்
கொஞ்சம்
அழுது, தொழுது, தெளிய
அடியேனுக்கும் அல்லாஹ்
அருள்புரிய வேண்டும்
குறைந்தபட்சம் - நல் ஈமானுடன்
மக்கா மண்வாசமணைத்து
வீசும் குளிரில் நனைந்து
சஹீதாவதற்காவது !

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# தினகரன் ஈதுல் அழ்ஹா பெருநாள் மலர் 02-02-2004

கருத்துகள் இல்லை: