
மனிதம் தொலைந்த
தேசத்தில் ஒருநாள்.
தூண்டில் புழுக்களே
மீன் வரப் -
பார்த்திருக்கும்
அவஸ்தையில்...
ஹலால் எதிர்ப்பைப்
பாடுபொருளாக்கி....
பிசாசுகளின் காடதிரவும்,
பறவைகளின் கூடதிரவும்....
அருவெறுப்பாயொரு
தேர்தல் வரும்...
அசைக்க முடியாக்
கர்வம் கொண்டிருக்கும்
'சாத்தான் கட்சி',
குருதி புசைத்தாலும்
குருவி தின்றாலும்
வெற்றிதான் -
வெறியென்றுழைக்கும்
இம்முறையும்.
யானைகள் பூனைகள்
மரங்கள் -
மந்திகளோடெல்லாம்
பேரம் பேசிக் களைத்து,
இறுதியில்
குறவர்களுடனோ
துறவர்களுடனோதான்
கூட்டமைத்துக் கொள்ளும்
சாத்தான்களுக்கான-
இந்தத் தனிக்கட்சி.
தோள்கொடுத்த
தோழமைக் கட்சிகளும்
தொடைநடுங்கி -
எகிறிக் குதித்தோடும்,
தொற்றிக்கொள்ளத்
துடித்தோய்ந்து.
எலி வலைதேடி...
எருது மணிதேடி...
புலி புல்தேடி....
கழுதை கெட்ட
குட்டிச்சுவரும்
சுயேட்சையாகத்
தன்னையலங்கரித்துக்
-கொள்ளும்.
தனியிலாகாவோ,
துணியிலாகாவோ...
தும்புத்தடி இலாகாவோ...
கனவில் கம்பீரமான
மந்திரிப் பதவி மோகத்தில்,
காளான்கள் கரையான்கள்
கரப்பான்கள் கூடக்
காதலாய்க் களமிறங்கும்.
வெற்றிலைக் கும்பிடுகள்
கைவரப்பெறா-
விலங்குகளின் பிரசாரம்
பித்துப் பிடித்ததாயிருக்கும்.
மான் வேட்டையாடி
மயில்களையும் -
மேய்ந்தெழுவார்கள்
சாத்தான் விசுவாசிகள்.
காகங்கள் குடைபிடித்து,
ஓநாய்கள் கடைவிரிக்கும்
-வெள்ளாடுகளையும்
இழுத்து வந்து...
தங்கப் பல்லில்
- சிரிக்கும்
வேட்பாளர் கழுத்துப்
புலிப்பல் செயினில்....
விதவைகளின் விசும்பல்
விக்கலாகத் தெறிக்கும்.
காணாமல் போனவை
தேடிப் புறப்பட்டதுகளும்
காணாமல் போய்...
களநிலவரத்
திமிரும் -
தீயும் பார்த்து...
நதியலைகள் அழுது
வெயில் வெட்கித்து..
கறுப்பிரவுச் -
சூனியமாகத் துடிக்கும்
நீதி செத்த தேர்தல்.
மாமிசப் பாய்விரித்து...
மதுபானத்
தொட்டில் கட்டி...
காசுக்கும் உடலணைக்க
விரும்பாத -
விலைமாதும் முகஞ்சுளிக்கும்
வெறுப்போடு வெளியாகும்
தேர்தல் பெறுபேறு.
பேய்களுக்கே
பேயறைந்தாற்போல்...
மனிதம்களுக்கான
மக்கள் கட்சி -
மார் கிழிந்து,
மண்ணைக்கவ்வி...
பன்றிகளும் வாக்களித்து
அருதிப் பெரும்பலத்தில்
வென்று களிக்கும்,
சாத்தான்களுக்கு மட்டுமேயான
சாத்தான் கட்சி.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக