அகலத் திறந்த
- யன்னலோரம்...
விழி விழித்தமர்ந்து...
காற்று வாங்கி
- ருசித்து...
வழுக்கும் சாலையோர
மரங்களும் மனிதர்களும்
- நழுவுவதை ரசித்து...
மனசுக்கும் செவிகளுக்குமான
இடைவெளியில் -
திரிந்ததோர் பழைய
- பாடலில் உருகி....
அப்போதைய
பேரூந்துப் பயணங்கள்
அழகழகாய்த்தானிருந்தன.
சுருங்கிய நேரத்தில்
தொலைதூரமும்
பக்கத்தேயிருந்தது.
இறக்கை கட்டிப்
பறந்தவுணர்வில்...
நடத்துனர்
ஞாபகப்படுத்தியும்
இறங்கிச் செல்லத்
- தோன்றாமல்....
இருக்கைகள்
நம்மை இறுக
அணைத்திருந்த
பேரூந்துப்
பயணங்கள் அவை.
உடல்களாய்ப் படியிறங்கி
ஓடும் பேரூந்தில்
மனசுகளைத் தொலைத்த
அந்தக் காலம்...
இனிப்பாயிருந்தது...
இதமாயிருந்தது...
அப்போது,
ஆண்கள் ஆண்களாகவும்
பெண்கள் பெண்களாகவும்...
பயணிகள்
மனிதர்களாகவுமே
தெரிந்தார்கள்.
பேரூந்து முழுக்கவும்
பாசமும் வாசமும்
கமழ்ந்திருந்த காலமது,
சுருட்டு வாசணையோடு
- வரும் தாத்தாக்களும்...
வெற்றிலைக் காவியுதட்டோடு
- வரும் பாட்டிகளும்
காறியுமிழ்ந்து
எவரும் முகம் சுருங்கிப்
- பார்த்ததில்லை.
பத்திரிகை படிக்கிறவர்கள்
அடுத்தவர் முஷ்டியில்
தம் கரங்களை விரித்ததில்லை.
முகத்தில் தடவிய
பவுடர் கலையாமல்
ஏறிய பெண்கள்...
தலையில் சூடிய
மல்லிகை உதிராமல்தான்
இறங்கியும் சென்றார்கள்.
அசிங்கமாய் யாரும்
கசங்கியும் பார்த்ததில்லை....
ஆடைகள்
அலங்கோலமாய்
நழுவியும் பார்த்ததில்லை...
அமர்ந்தோ சாய்ந்தோ
நின்றோ நிமிர்ந்தோ
அந்தப் பேரூந்துப்
- பயணங்கள்
ஆரோக்கியமாகத்தானிருந்தன.
தயிர்ச் சட்டிகளும்
வற்றல் பொட்டலங்களுமாய்...
சந்தைக்குச் செல்வோர்
வியர்வையூறி
நாறியேறி இறங்கினாலும்...
நாசித்துவாரங்கள்
- எப்போதும்
கோபித்துக் கொண்டதில்லை...
சில்லறை கேட்கவே
நாணும் நடத்துனர்
விசில் சத்தமே
சங்கீதமாய்த் தெரியும்.
சர்வ ஜாக்கிரதைச்
சாரதியோ
சகலருக்குமான
தெய்வமாகத் தெரிவார்.
கனகாம்பரக்
கூடையணைத்து வரும்
கனகவல்லியும்,
கருவாடு
தோளில் சுமந்துவரும்
சுந்தரேசனும்...
பரிமாறிக் கொள்ளும்
பார்வையில் தெரிந்த
காதலில்கூட,
யாரும் -
நிர்வாணம் பார்த்ததில்லை.
கர்ப்பிணி ஆசனத்தைச்
சுற்றியெப்போதும்
காற்றும் மனசுகளுமிருந்த
பேரூந்துப் -
பயணங்கள் அவை.
சாராய நெடியும்
முறுக்கு மீசையுமாய்
ஏறினாலும் -
யாரும் எவருக்கும்
வில்லன்களாகத்
தெரிந்ததில்லை.
இப்போதெல்லாம்
அடித்துப்போட்ட
அயர்ச்சியில் வந்து
படுத்துப் பார்த்தாலும்...
கனவில்கூடத்
தோன்றுவதாயில்லை
அந்தச்-
சுகப் பயணங்கள்.
பேரூந்துப்
பயணமென்றாலே
அடுப்பெரிபட்டு
அலறுமளவில்
அலர்ஜியாகவேயிருக்கிறது.
இருபது நிமிடங்களில்
இரு தரிப்பிடத்
தூரமென்றாலும்...
ஆடையும் மனசும்
ஒருசேரக் கசங்குவதைத்
தவிர்க்க முடிவதில்லை.
வரமாயிருந்த பயணங்கள்
சாபமென்றாகி...
மனிதம் தொலைத்துச்
சகலரும் -
பயணிகளாகவோ
ஜடங்களாகவோதான்
இருக்கிறார்கள்.
வில்லன்கள்கூட
முழுதாக முகச்சவரம்
செய்துதான்
முளைக்கிறார்கள்.
வக்கிரம் கலந்திசையும்
- கைப்பேசிகளும்...
விரசம் தோய்ந்திழுக்கும்
- பார்வைகளும்...
அத்துமீறியுரசும்
- அசிங்கங்களும்...
குப்புறப்படுத்த
மனசுகளுமாய்....
சர்க்கரைப் பயணங்களில்...
இப்போதெல்லாம்
விஷ வாடையின்
வீச்சம்தான் அதிகமடிக்கிறது.
_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக