மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

என்னைப் பெத்த ராசா...

என்னைப் பெத்த
ராசா,

உன்னைப்
பெற்ற வயிறு
பெருமிதத்தில்
எழுதிக்கொள்வது,

என்னில் விளைந்த
முத்தே...ஹியூகோ,

சாத்தான்
தோட்டத்துக்
காவலர்களுக்குத்
தெரியாமல்,

சேகுவராவுக்குச்
செய்தி
அனுப்பிவிட்டேன்,

உன்னையங்கு
காத்திருந்து வரவேற்று
நலமாயுபசரிக்க...

மகனே...
மாணிக்கமே...

உன் அம்மா
சொல்லக்
-கேட்பாயா?

நீ துணிந்து
பார்த்த நான்
இதுவரை -
நீ தூங்கிப்
பார்த்ததில்லை...

நலிந்தவர்
நன்மை நாடி
நீயேங்கிப் பார்த்த
நான் -
நீ ஓய்ந்து
பார்த்ததில்லை,

ஒடிந்து -
ஓடியொளிந்து
பார்த்ததுமில்லை.

ஒட்டக முதுகாய்
வளைந்து -
பார்த்ததுமில்லை.

மசக்கைப் பெண்ணாக
உட்கார்ந்து -
பார்த்ததுமில்லை.

மாறாக,

மரணத்தின்
வாயில்களிலும் மாறா
கம்பீர முகமணிந்து
சிரிக்கவும்,

மணக்க மணக்க
மனிதம்களுக்காகச்
சிந்திக்கவுமே
பார்த்திருக்கிறேன்.

எனினும்,

இங்கே -
இத்தனை நாளும்,

தரையில் படுத்துச்
செந்தணலில்
வெந்தது போதும்...

அங்கேயாவது
உறக்கத்தையும்
கட்டிலையும்
அடுத்தவரிடம்
தொலைக்காமல்...

உனக்காகக்
கொஞ்சம்
தூங்கியெழு கண்மணி.

ஏகாதிபத்தியப்
பேய்களிருக்காத
அவ்வுலகில்
புரட்சித் தீயெரிக்கத்
தேவையிருக்காது.

மட்டுமன்றி,

தேனாறும்
தேவதைகளுமான
அவ்விடத்தில்தான்
கெட்ட கனவுகளின்
நச்சரிப்பின்றி...

உன்னால்
நிம்மதியாகத்
தூங்கியெழ முடியும்.

மகனே சாவேஸ்,

உன் வெனிசியூலா
தாண்டியும் கமழ்கிறது
உனக்கான -
பிரார்த்தனை வாசம்.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: