மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

அப்பாவின் சிகரட் கதை

அம்மாவுக்கு வீடு
அக்காவுக்கு நகை
எனக்கவர் கடை,

தவிரவும்
தனிக்கணக்கில்
ஆளுக்கொரு
வைப்பெனப்...

பார்த்துப் பார்த்துச்
செய்த அப்பா,

எப்போதோ 

தொட்ட
சிகரட்டை
விடாமலேயே,


இறந்து போனார்
ஒருநாள் -
 எம்மைவிட்டு.

சேலைத் தலைப்பில்
விழிதுடைத்து -
இன்றைக்கும்
அம்மா சொல்வா,

" பாவி மனுசன்
கடைசிவரைக்கும்
திருந்தவேயில்லை..."

தெரிந்திருந்தும் -
என்றைக்கும் அவர்
சொன்னதில்லை...

அப்பா -
முதல் காதல்
தொலைத்துத் தொட்ட
சிகரட் கதையை.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: