மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

ஒரு காதல் காத்திருக்கிறது

உரசினாலும்
உரசப்பட்டாலும்
எரிவதும் கருகுவதும்
- தீக்குச்சிதான்....

உன்னில் வாழும்
என் காதல்
-நிலைமையும்
இதுதான் கண்மணி.

வாவென்று
அழைக்கமட்டுமே
தெரிந்த காதல்....

எப்போதைக்குமே
விட்டுப் போவென்று
சொல்வதில்லை...

எனினும்...
வா என்பதையே
வருந்தித்தான்
கேட்கவும்.....

நலமா என்பதை
நாவுலர்ந்துதான் 
விசாரிக்கவும்
முடிவதில்லை கண்மணி.

சுகம்தான்
என்றாலும்
சூனியச் சூழ்நிலையில்,

மனச்சிறகுகளைக்
கத்தரிக்கத்தான்
- வேண்டியிருக்கிறது.

விட்டுப் போவாயா
என்று கேட்பதில்கூட
காதல் சங்கடப்படுகிறதே
-தவிர....

எப்போதைக்கும் -
காதல் சந்தேகப்படுவதில்லை.

கழுத்தறுப்பும்
கண்துடைப்பும்
மனிதர்களில்
- ஊறும் விஷமாயினும்....

அருந்திப் பார்ப்பதில்
மனசுக்கு உடன்பாடில்லை.

நீயங்கு
வாழ்நாள் நெடுகத்
தீ மிதிப்பதை விடவும்,

நான் சிலபொழுது
சேறு மிதிப்பதில்
தப்பில்லை கண்மணி.

உனக்கான இருக்கையும்
வாழ்க்கையும்....

இன்னுமோர் காதலும்
காத்திருக்கிறது....

பயணப்படும்
பட்சத்தில்....
நான் சிறு புள்ளியாகத்
- தெரிந்து மரிப்பேன்.

கருத்துகள் இல்லை: