உனக்கு அழத்தோன்றும்
ஓர் நாளில்
என்னை அழை...
சத்தியமாக நானுன்னை
சிரிக்க வைக்க மாட்டேன்
நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தழ முடியும்.
.......
உனக்கு
தூரத்தேயெங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஓர் நாளிலும்
அச்சமுதறி
என்னை அழை...
சத்தியமாக நானுன்னை
நின்றுவிடக் கேட்கமாட்டேன்
நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தோடிவர முடியும்
.......
உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
என்னை அழை...
சத்தியமாக
நான் இரைந்து
பேசமாட்டேன்
நிச்சயமாக என்னாலும்
மவுனம் காக்க முடியும்
.......
ஆனால்,
நீயாக அழைக்குமோர் நாளில்
என்பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்...
வேகமாக வந்து
என்னைப் பார்
சேர்ந்தழவோ
சேர்ந்தோடவோ
இல்லை
மவுனமாக விழிபார்த்து
அமர்ந்திருக்கவோ
அன்றைக்கு
என் தேவை
நீயாக இருக்கலாம்.
( நான் பொறுப்பாசிரியராக இருந்த செந்தூரம் (தினகரன் வாரமஞ்சரி)இதழில் 2001 ஜனவரி மாதம் எழுதிய கவிதை.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக