மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 17 ஜனவரி, 2022

மயிலிறகுச்சேலைதான் என் போர்வை

உம்மா விட்டுச்சென்ற பாசிப்பச்சை
மயிலிறகுச்சேலைதான் என் போர்வை


என் உறக்கத்தோடு மேவிப்படர்ந்தென்னை
உயிரோடு வைத்திருக்கும் அமிர்த வாசனையும்
உம்மா விட்டுச் சென்றதுதான்.

என் சுவாசத்தை நீவிவிடும் அந்த சுகம்தான்
உம்மாவின் அச்சார அரவணைப்பு.

அழுக்காயிடாதபோதும் இப்போதும் எப்போதாவது
துவைத்துக் கழுவிக் கொடியில் போட்டாலும்...

உலற்றிவிடப் பயந்தஞ்சியொடுங்கிச்
சுருண்டோடி விடுகிறது
அதுவரைக்கும் காத்திருந்த முரட்டு வெயில்,

கசக்கியதிகம் முறுக்கிப் பிழியாத
அச்சேலையில் இருந்து
சொட்டிக்கொண்டிருக்கிறது உம்மாவின் ஈரமனசு.

உம்மா, என்னை விட்டுப்போய் ஒரு வருஷமாச்சு...
நிறையாமை என் சிறு உலகு பாழுங்கிணறாச்சு

உங்கள் பாதங்களின் கீழ் சொர்க்கம் தேடியலைந்தே
தோற்றுக்கொண்டிருக்கிறது கோதுகமும் வாழ்வாசையும்.

என் போர்வை நைந்து போவதற்குள்
நான் இறந்துவிட வேண்டும்!
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை: